ஊரடங்கால் நலிந்துள்ள தொழில்களை மேம்படுத்த 20 லட்சம் கோடி சிறப்புத் தொகுப்பு என நாக்கில் தேன் தடவியபடியே, தொழில்துறை நலிவடைந்திருப்பதைக் காரணமாக்கி முழுமையானத் தனியார் மயத்திற்கும் தொழிலாளர் உரிமைச் சட்டங்களை மாற்றுவதற்குமான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஒவ்வொருநாளும் பேட்டி கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புலம்பெயர் தொழிலாளர் மீதான பார்வையும் அறிவிப்புகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இவை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், நக்கீரனிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
தற்சார்பு பாரதம் என்ற பெயரிலான பொருளாதாரத் தொகுப்பு, தனியார்மயம் நோக்கி நாடு செல்வதைக் காட்டுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் நீண்டகாலமாக உருவாக்கி வைத்திருக்கிற செல்வ ஆதாரங்களை விற்கிற சேல்ஸ் உமனைப் போல பேசியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரையைவிட கூடுதல் நேரம் பேசியிருக்கும் அவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நாதியற்று அலைந்து கொண்டிருக்கும் கோடிக்கணக் கான மக்களைப் பற்றி துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கிய வர்கள் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுதான் வாய்ப்பென்று, அரசுத்துறைகளை தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவுக்கு அரசு சென்றிருக்கிறது. சுயசார்பு என்று சொல்லிக்கொண்டே ராணுவத் தளவாடங்களில் 74 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு திறந்து விட்டிருக்கிறார்கள். நீண்டகாலத் திட்டமென்று இந்த அரசு எதையும் முன்வைக்கவில்லை. இது விளிம்புநிலை மக்களை இன்னும் கொடூரமான நிலைக்குத் தள்ளும்.
தனியாருக்குக் கொடுப்பதால் அரசின் நெருக்கடிகளைக் குறைப்பதோடு, வளர்ச்சியையும் பெருக்க முடியும் என்கிறார்களே?
யெஸ் பேங்க் தனியார் வங்கிதானே. அதன் நெருக்கடியைச் சரிசெய்ய ஏழைமக்களின் பணத்தைத்தானே அரசு பயன்படுத்தியது. எப்போதெல்லாம் தனியார் நிறுவனங்கள் நஷ்டப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் அரசுதானே நிதியைக் கொடுத்து காப்பாற்றுகிறது. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் 10 சதவீதம் பெரு முதலாளிகளின் சொத்துமதிப்பு, 73 சதவீதம் இந்தியர்களின் சொத்து மதிப்புக்கு சமம் என்று இருந்தது. இதுவே, 2020ல் வெறும் 1 சதவீதம் இந்தியப் பெருமுதலாளிகளின் சொத்துமதிப்பு, 70 சதவீதம் இந்தியர் களின் சொத்து மதிப்பைப்போல நான்கு மடங்கு அதிகமாக மாறி யிருக்கிறது. வெறும் 63 இந்திய பெருமுதலாளிகளின் சொத்துமதிப்பு, சென்ற ஆண்டு மத்திய பட்ஜெட்டுக்கு சமமானதாக இருக்கிறது. அதே சமயம், ஏழைகளின் வருமானமும், வாங்கும் சக்தியும் குறைந்திருக் கிறது. பட்டினிச்சாவுகள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் பொருளாதாரத் தொகுப்பினால் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது.
தனியார் நிறுவனங்களால் அரசுக்கு பெரியளவில் லாபம் இருக்கிறதுதானே?
அப்படியொரு கருத்து மக்களிடமே இருக்கிறது. உண்மையில், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்யவே முடியாதவர்கள் சாதாரண ஏழை மக்கள்தான். எந்தப் பொருள் வாங்கினாலும் அவர்கள்தான் வரி செலுத்துகிறார்கள். இந்தத் தொகை இந்திய வரிவருவாயில் 50 சதவீதத்துக்கும் அதிகமானது. ஆனால், அவர்களை இந்த அரசு கண்டுகொள்வதில்லை என்பதுதான் பிரச்சனையே.
புலம்பெயர் தொழிலாளர்களின் அவசரம்தான், சமீபத்திய அசம்பாவிதங்களுக்குக் காரணம் என்கிறதே அரசு?
அரசினுடைய நோக்கம் சரியானதாக இருந்தால் ஏ.சி. ரயில்களை விடுவார்களா; அதுவும் கூடுதல் கட்டணத்துடன்? ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்றார்கள். அதில் உண்மையில் லையே. மேற்குவங்கத் தேர்தலின்போது, ஐந்து ரயில்களில் பக்கத்து மாநில மக்களை மோடியின் பிரச்சாரத்துக்குக் கூட்டிச் சென்றார்களே. அது அரசுப் பணம்தானே! கொளுத்தும் வெயிலில் காலில் செருப் பில்லாமல், உடைமைகளையும் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு, பசியும் வலியுமாக நடக்கிறவர்களை இந்த அரசு ஏளனம் செய்யுமென் றால், நீரோ மன்னனே ரொம்ப நல்லவன் என்று தோன்றுகிறது. புலம்பெயர்த் தொழிலாளர்கள் குறித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்காததும், நீதிமன்றங்கள் வேடிக்கை பார்ப்பதும், இந்திய வரலாற்றின் அநாகரிகக் காலமாக எழுதப்படும்.
மத்திய அரசின் அறிவிப்புகள் சிலவற்றின் மூலம், தொழிலாளர் உரிமைகள் பறிபோகும் சூழல் உருவாகிறதா?
வேலைநேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்கப் போவதாக சொல்கிறார்கள். இன்று பல் வேறு துறைகளில் பெண்களும் இருக்கிறார்கள். வேலைநேரம், போகவர போக்குவரத்துக்கு ஆகும் காலம் என ஒருநாளில் 14 மணிநேரம் செலவழித்தால், அவர்கள் குடும்பத்தை எப்படி கவனிப்பார்கள். ஒருவேளை குடும்பத்தைப் பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டால், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் வேலையின்மை இன்னும் அதி கரிக்காதா? வேலையிடத்தில் கழிப்பிட வசதியோ, வார விடு முறையோ தரத் தேவையில்லை என்று குஜராத்தில் சட்டம் போட்டிருக்கிறார்கள். வளர்ச்சி என்பது மனிதத்தை மேம்படுத்தத் தானே. அதைக் கண்டுகொள்ளா மல் வெறும் பணத்தைச் சம்பா தித்து வைத்து, அவித்துத் தின்பார் களா. இந்த அரசின் அஜெண்டா தொழிலாளருக்கு எதிரானது, மனி தத்துக்கு எதிரானது, தேசத்திற்கே எதிரானது. தனியார்மயம் மோச மென்பதை முன்னெப்போதை யும் விட தொழிலாளர் வர்க்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. எனவே, அவர்கள் நிச்சயம் வீதியிலிறங்கி குரல் கொடுப்பார்கள்.
சந்திப்பு - பெலிக்ஸ்
தொகுப்பு : ச.ப.மதிவாணன்